விஜயை சந்தித்தது உண்மை; கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவு தலைமையிடமே – பிரவீன் சக்கரவர்த்தி
தவெக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான் என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் கட்சி தலைமை தான் எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார். தமிழகத்தில் இது பெரிய விவாதமாக மாற்றப்படுவதாக குறிப்பிட்ட அவர், டில்லியில் இதுபோல் பல்வேறு நபர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கமான ஒன்றே என்றும் விளக்கினார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து தான் கருத்து தெரிவித்ததாகவும், உத்தரபிரதேசத்துடன் ஒப்பீடு செய்ததாக கூறப்படுவது தவறான புரிதல் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தான் கருத்து கூறியதாக அவர் விளக்கம் அளித்தார்.
கோவையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயின் அரசியல் செயல்பாடுகள் மக்களிடையே கவனம் பெறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மக்கள் அவரை நடிகராக அல்ல, அரசியல்வாதியாக பார்க்க வருவதாகவும், அதனால் அவர் ஒரு அரசியல் சக்தியாக உருவாகி வருகிறார் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது என்றார்.
அரசியலில் பொதுவாக அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் எழுவது இயல்பானது என்றும், இது காங்கிரஸ் தொண்டர்களின் நீண்டகால கோரிக்கையாகவே இருப்பதாக அவர் கூறினார். கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமடைந்த நிலையில், கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் கருத்துகள், கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால், இறுதி முடிவை எடுப்பது எப்போதும் கட்சி தலைமை தான் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் வலியுறுத்தினார்.
