அரசியல் புரிதலோடு முடிவுகளை ஏற்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுரை
சென்னை: மாவட்டச் செயலர் மற்றும் நிர்வாகிகள் நியமனங்களில் எழும் விமர்சனங்களை அரசியல் புரிதலுடன் அணுக வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலர் நியமனங்களை தொடர்ந்து, சிலர் அதிருப்தி தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மாவட்டச் செயலர்கள், வயது வரம்பு மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்த பங்களிப்பு ஆகிய அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளில் ஒரே நபர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மாவட்டச் செயலராக இருப்பது வழக்கம். அந்த கட்சிகளில், தலைமை எடுத்த முடிவுகளை தொண்டர்கள் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் அந்த நிலை உருவாக வேண்டும்.
ஒரு தொகுதியில் தகுதியான நபர் கிடைக்காத சூழலில், சீனியாரிட்டி அடிப்படையில் வேறு தொகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்க நேரிடுகிறது. இதையும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சி வளர்ச்சிக்காக துாக்கம் இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருவதாகவும், உடல்நல பாதிப்புகள் இருந்தாலும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும், எந்த விஷயத்தையும் அரசியல் புரிதலுடன் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இனி வரும் நாட்களில் நிர்வாகிகள் நியமனம் தொடரும் என்றும், ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும், ஆனால் முழுமையான மாற்றம் சாத்தியமில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.
