மத நம்பிக்கைக்கு எதிரான மிரட்டல்; திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : பால கவுதமன் வலியுறுத்தல்
சென்னை: ‘மே 17’ இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு நாட்டின் அமைதி, மத நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது எனக் கூறி, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் பால கவுதமன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜனவரி 22-ம் தேதி காஞ்சிபுரம் சென்று ராவணக் கோட்டம் அமைப்போம் என்றும், சங்கரமடத்தை ஒழிப்போம் என்றும் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார். இதுபோன்ற அறிவிப்புகள் கலகத்தைத் தூண்டும் வகையிலானவை என்றார்.
ராமன் – ராவணன் விவகாரம்
ராவணன் யார், ராமன் யார் என்ற அடிப்படை வரலாறு கூட தெரியாமல், தமிழ் உணர்வை பயன்படுத்தி அரசியல் செய்யப்படுகிறது. இது கீழ்த்தரமான அரசியல். ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதே இத்தகைய அறிவிப்புகளின் நோக்கம் என அவர் குற்றம்சாட்டினார்.
மத நம்பிக்கைக்கு எதிரான செயல்
ஒரு மத நிறுவனத்தை இடித்து மற்றொன்றை அமைப்பதாக அறிவிப்பது மிரட்டலாகும். இது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் செயல். நாட்டின் பண்பாடு மற்றும் நம்பிக்கையை சிதைக்கும் முயற்சியாக இதை பார்க்க வேண்டும் என்றார்.
அரசு மீது குற்றச்சாட்டு
இத்தகைய பிரிவினைவாத போக்குகளை தி.மு.க. அரசு ஊக்குவிப்பதாகவும், ‘மே 17’ போன்ற அமைப்புகள் அரசால் வளர்க்கப்படும் பிரிவினைவாத அமைப்புகள் என்றும் பால கவுதமன் குற்றம்சாட்டினார்.
கைது கோரிக்கை
நாட்டில் கலகத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால், திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். இதுவே நாட்டின் அமைதியை காக்கும் ஒரே வழி என அவர் வலியுறுத்தினார்.
