மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பே உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் 18-ம் தேதி முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 06) காலை 10.30 மணிக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது.
தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது
தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்
தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதத்தை ஏற்க முடியாது
இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
