கோவில் பாதுகாப்பில் அரசு அலட்சியம்; ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
திருப்பூர்: கோவில்களின் புனிதம் மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு அலட்சியம் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் கோவிலில் அத்துமீறி நுழைந்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அநாகரிக சம்பவங்கள் இது முதல் முறை அல்ல.
கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கோவில் விக்ரகங்களை சேதப்படுத்துபவர்கள் மீது புகார் அளிக்கப்படும் போது, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி, காவல்துறை வழக்கை முடித்து விடுவது அரசு மற்றும் காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியமே எனக் கருத வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், இதுபோன்ற அத்துமீறல்கள் மற்றும் கோவில் சுவாமி திருமேனிகள் உடைப்பு சம்பவங்கள் நுாற்றுக்கணக்கில் நடந்துள்ளதாக குறிப்பிட்டார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் நுழைந்து சுவாமி திருமேனிகளை சேதப்படுத்திய சம்பவத்திலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி வழக்கை முடித்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான காவல்துறையின் அலட்சியம் அரிதானது அல்ல; வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டதாகவும், சமீபத்திய சிதம்பரம் கோவில் சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் கூறினார்.
போலீசாரின் அலட்சியப் போக்கினால், சமூக விரோதிகளுக்கு கோவில்களில் உண்டியல் திருட்டு முதல் அனைத்து வகையான குற்றச் செயல்களிலும் ஈடுபடும் தைரியம் கிடைக்கிறது என்றால் அது மிகையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வேற்று மதத்தினரின் வழிபாட்டு இடங்களில் சம்பவம் நடந்தால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலும் கூட, அதனை மறைத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுப்பதாக மக்கள் நன்கு அறிந்தே இருப்பதாகவும் கூறினார்.
கோவில்களில் நடைபெறும் அத்துமீறல்கள் பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும், அத்துமீறி நடப்பவர்களையும், விக்ரகங்களை சேதப்படுத்துபவர்களையும், அரசியல் செல்வாக்கு மமதையில் செயல்படுபவர்களையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
