ரூ.10 லட்சம் கோடி கடனுடன் நிதி மேலாண்மை எப்படி? – சீமான் கேள்வி
காரைக்குடி: தமிழகத்தில் ஏற்கனவே நிதி மேலாண்மையின்றி ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்ட சீமான், தற்போது அந்த நிதிச்சுமையை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளாக போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் நேரத்தில் மட்டும் ஓய்வூதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஆளும் அரசின் ஓட்டு அறுவடை அரசியலை காட்டுகிறது. அரசு ஊழியர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், இந்த அறிவிப்புகள் முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல, இந்த அறிவிப்புகள் மாநில அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். துாய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், அவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் விமர்சித்தார். மாற்று பொருளாதார வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசுக்கு வரி மற்றும் மதுவிற்பனை மூலமே வருவாய் கிடைக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களுக்கு கடும் சுமையாக உள்ளது. ரூ.10 லட்சம் கோடி கடன் பெற்றும், மாநிலத்தில் எந்தவித திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை என்றும் சீமான் கூறினார்.
பெண்கள் மாதம் ரூ.1000 கேட்டு வீதிகளில் போராடவில்லை. இதை ஓட்டுகளை ஈர்க்கும் நுட்பமாகவே பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். எந்த கருத்துக் கணிப்பும் ஓட்டாக மாறுவதில்லை என்றும் கூறிய அவர், புதிதாக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக கூறினார்.
வடமாநில இளைஞர்கள் அதிகமாக வருவதும், போதைப்பொருள் பரவலுக்கும் காரணமாக இருப்பதாக தெரிவித்தார். மருத்துவமனைகளில் டாக்டர்கள் மது அருந்தியது பெரிய குற்றமல்ல; ஏனெனில் அரசே மதுபானம் விற்பனை செய்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
