மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: 68 இடங்களில் பா.ஜ., கூட்டணி போட்டியின்றி வெற்றி
மும்பை: மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மஹாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், ஆளும் மஹாயுதி கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருந்தது.
இதற்கிடையே, மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இந்த சூழலில், வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளில் பல எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் மொத்தம் 68 இடங்களில் மஹாயுதி கூட்டணி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 44 இடங்களில் பா.ஜ.,, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 22 இடங்களில், மேலும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக, நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்த ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 50க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
இந்த நிலையில், ஆளும் பா.ஜ., அரசு பணபலமும் அதிகார பலமும் பயன்படுத்தி, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைத்ததாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு மாலை 3 மணியுடன் முடிவடைந்தபோதும், நள்ளிரவு வரை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
