ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல் செலவு: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்
சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (DAPBS) அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) அறிவித்தார். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன், திமுக இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அந்த வாக்குறுதி நிறைவேறாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த சூழலில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பல முக்கிய அம்சங்கள் இந்த புதிய திட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய DAPBS ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1.ஓய்வு பெறும் அரசு அலுவலரின் கடைசி மாத ஊதியத்தின் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
2.இதற்காக ஊழியரின் 10% பங்களிப்புடன், மீதமுள்ள தொகையை தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.
3.ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏ உயர்வு வழங்கப்படும்.
4.ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
5.ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறந்தாலும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்.
6.தகுதியான பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
7.CPS திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, இந்த புதிய திட்டம் அமலுக்கு வருவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழக அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ–ஜியோ அமைப்புகள் வரவேற்பு
புதிய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஜாக்டோ–ஜியோ அமைப்பினர், இந்த அறிவிப்பை வரவேற்று, ஜனவரி 6 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் நிறைவேற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
