வெனிசுலா ஆட்சி அமெரிக்க கட்டுப்பாட்டில்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: வெனிசுலாவில் புதிய அரசு அமைக்கப்படும் வரை, அந்த நாட்டின் அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மதுரோ கைது செய்யப்படும் காட்சியை நேரலையில் பார்த்ததாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த டிரம்ப், வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அந்த நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்காவே மேற்கொள்ளும் என கூறினார். வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக சீரழிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்நாட்டில் வாய்ப்புகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, அதன் மூலம் வருமானம் உயர்த்தப்பட்டு நாடு வளமாக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், நிக்கோலஸ் மதுரோ குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்தின் முதல் ஆப்பரேஷன் வெற்றியடைந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் ஒரு பெரிய தாக்குதலும் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் இதுபோன்ற தாக்குதலை கண்டதில்லை என்றும், சர்வாதிகாரி மதுரோவை நீதிக்குட்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் டிரம்ப் கூறினார்.
