வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்ததற்கு எதிர்ப்பு: ஷாருக்கான் மீது விமர்சனங்கள் தீவிரம்
புதுடெல்லி: வங்கதேச கிரிக்கெட் வீரரை ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுத்ததற்கு எதிராக, பாலிவுட் நடிகரும் கோல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் மீது இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த நான்கு வாரங்களில் மட்டும் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 9.2 கோடி ரூபாய்க்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு வீரரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்ததற்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், நாட்டுமக்கள் வங்கதேசம் மீது கோபமும் ஆத்திரமும் கொண்டுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அணியில் வைத்தால் அவர் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றார். ஷாருக்கானின் அணியில் வங்கதேச வீரர் இருந்தால், அவர் இலக்காக மாறுவதற்கு முன்பே அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஆனந்த் துபே கூறுகையில், வங்கதேச வீரர்கள் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஹிந்துக்களை கொன்று பிரிவினையை உருவாக்கும் நாட்டின் வீரரை உடனடியாக அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக எம்பி சங்கித் சிங் சோம் கூறுகையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதும், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், வீடுகள் எரிக்கப்படுவதும் நடந்து வருவதாக குற்றம்சாட்டினார். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாட்டின் வீரரிடம் முதலீடு செய்வதால் ஷாருக்கானை துரோகி என அழைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முஸ்தாபிசுர் ரஹ்மான் இந்தியாவில் விளையாட முடியாது என்றும், விமான நிலையத்தை கூட தாண்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் இருந்து பயன் பெற்றவர்கள் இந்தியாவுக்கு எதிரான நாடுகளை புகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்தார்.
