காங்கிரஸ் டெல்லிக்கும், திமுகவுக்கும் ஜால்ரா அடிக்கிறது: அண்ணாமலை கடும் விமர்சனம்
வேலூர்: காங்கிரஸ் கட்சியினர் டெல்லிக்கும், திமுகவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், தமிழக மக்களுக்கான பிரச்சினைகளை முன்வைத்து பேசும் காங்கிரஸ்காரர்கள் யாரும் இல்லை என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம் மற்றும் வன்முறை அதிகரித்துள்ளதாக கூறினார். கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்காமல் முதல்வர் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி வருவதாக விமர்சித்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் போதைப் பொருட்களை தடுப்பது மத்திய அரசின் பணி என்றும், மாநிலத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
“கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்தேன் என முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக சாக்குபோக்குகள் கூறி மத்திய அரசை குற்றம்சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது,” என அண்ணாமலை கூறினார்.
மேலும், தமிழகத்தில் தற்போது இரண்டு குழுக்கள்தான் உள்ளன என்றும், ஒன்று டெல்லிக்கு ஆதரவாகவும், மற்றொன்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கும் கட்சி என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் அதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என ஒரு நாளிதழில் படித்ததாக குறிப்பிட்ட அண்ணாமலை, தற்போது இருப்பது இந்திரா காங்கிரஸ் தான் என்றும் கூறினார்.
தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு புத்தாண்டு பரிசாக கிடைத்தது கைதுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனை கவனிக்காமல் முதல்வர் ஸ்டாலின் வேறு உலகத்தில் இருப்பதாக கூறிய அவர், திமுக ஆட்சி வேண்டாம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாகவும், வரும் தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
