புதுடெல்லி: நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை, சூரத் – பிலிமோரா இடையே 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் கடனுதவியுடன், மும்பை – ஆமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில் 2023 டிசம்பருக்குள் பணிகள் நிறைவடைய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டம் தாமதமானது.
இந்த நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
