சென்னை: புத்தாண்டு தினத்தில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை இருளில் அடைத்து, நள்ளிரவில் திக்குத் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டதாகக் கூறி, தமிழக அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், சமத்துவம் மற்றும் சமூகநீதியைப் பற்றி பேசிவிட்டு, நடைமுறையில் அதற்கு மாறாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். புத்தாண்டை உலகமே கொண்டாடிய வேளையில், தூய்மைப் பணியாளர்களை எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இருளில் அடைத்தது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தல் வாக்குறுதி எண் 285-ல் கூறியபடி பணிநிரந்தரம் செய்யப்படும் என்ற உறுதியை அரசு மறந்துவிட்டதாகவும், தூய்மைப் பணியாளர்களும் மனிதர்கள்தான் என்பதையே திராவிட மாடல் அரசு மறந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
புத்தாண்டு நாளில் தூய்மைப் பணியாளர்களை திக்குத் தெரியாமல் தவிக்கவிட்ட பாவமே, திமுக அரசை திக்குத் தெரியாமல் துரத்தும் என எச்சரித்துள்ள நயினார் நாகேந்திரன், தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
