புதுடெல்லி: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ‘பிரளய்’ ஏவுகணையின் இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை, 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து, 150 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரளய்’ ஏவுகணை திண்ம எரிபொருளைக் கொண்டு இயங்கும், குறைந்த உயரத்தில் பயணித்து இலக்குகளுக்கு ஏற்ப திசைமாற்றக் கூடிய குவாசி பலிஸ்டிக் ஏவுகணை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஏவுகணையை எதிரிகள் இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையின் இரு சோதனைகள், ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் ஒடிசா மாநில கடலோரத்தில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவு பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இயக்கத் திறனை மதிப்பிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில், இலக்குகளை துல்லியமாக தாக்குவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனைக்காக, ராஜ்நாத் சிங் டிஆர்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிரளய்’ ஏவுகணை, இமாரத் ஆய்வு மையம், பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிஆர்டிஓவின் பிற ஆய்வகங்கள் இணைந்து வடிவமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
