உ.பி.யுடன் தமிழகத்தை ஒப்பிடக் கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
காரைக்குடி: இந்தியாவிலேயே வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுவதாக, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆனால், உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கருத்துடன் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், பிப்ரவரி மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் தெரிவித்தார். நல்ல தேர்தல் அனுபவம் கொண்ட இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து, திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இரு கட்சித் தலைமைகளின் ஆலோசனையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார். இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது மிகப் பெரிய தவறு என்றும், இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார். பெரியார் ஏற்படுத்திய வரலாற்றுப் புரட்சியை காலத்தால் அழிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நடிகர் விஜயின் அரசியல் முயற்சி வெற்றி பெறாது என்றும், இந்தியா கூட்டணிதான் வெல்லும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். தனிநபர் கருத்தும், கட்சியின் முடிவும் வேறு வேறு என்றும், இது சர்வாதிகார நாடு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பதிவில், உத்தரப் பிரதேசத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
