சென்னை: திருத்தணியில் வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடந்த தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், அதே பகுதியில் வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணி ரயில் நிலையம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில், வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடந்த கொடூரத் தாக்குதல் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்காத நிலையில், நேற்று ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர் எந்தவித காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தனிப்பட்டதாக அல்ல என்றும், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இது ஒரு தொடர்ச்சியான மற்றும் கவலைக்குரிய போக்காக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
திமுக ஆட்சியில் பொதுப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், சாதாரண குடிமக்களே தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். சட்டம்–ஒழுங்கைப் பராமரிப்பதில் ஏற்பட்ட தோல்வியை திமுக அரசு ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
