2026–27 மத்திய பட்ஜெட் குறித்து பிரதமருடன் நிர்மலா சீதாராமன், பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை
புதுடில்லி: 2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய பட்ஜெட் 2017ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டில் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக பாராளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றம் கூடியது என்பதும் நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், 2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்பார்க்கப்படுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்பான சூழலில், இன்று (டிசம்பர் 30) டில்லியில் பிரதமர் மோடியுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் உள்ளிட்ட நிதி ஆயோக் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
