ஊழல் காரணமாக மேற்கு வங்க வளர்ச்சி பாதிப்பு: அமித் ஷா பேச்சு
கோல்கட்டா: மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோல்கட்டாவில் நிருபர்களிடம் பேசிய அவர், மேற்குவங்கத்தில் பயமும் ஊழலும் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். நல்லாட்சியை கொண்டு வர மேற்குவங்க மக்கள் உறுதி எடுத்துள்ளதாகவும், மாநிலத்தில் ஊடுருவல் விவகாரம் குறித்து மக்கள் கடும் கவலை கொண்டுள்ளதாகவும் கூறினார். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்பதுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆதாயத்திற்காக முதல்வர் மம்தா பானர்ஜி வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கு துணைபோகிறாரென அவர் குற்றம் சாட்டினார். 2026ம் ஆண்டு மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சி அமையும் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் கிழக்கு எல்லைகள் வழியாக நடைபெறும் ஊடுருவலை நிறுத்தி மாநிலத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசு தேவையான நிலத்தை வழங்காததால், வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கு மேற்குவங்க அரசே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்குவங்க மக்கள் இதுவரை காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறிய அமித் ஷா, தற்போது பாஜவுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாகவே மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மீண்டும் குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜவின் வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், 2014 லோக்சபா தேர்தலில் பாஜ 17 சதவீத வாக்குகளையும் 2 இடங்களையும் பெற்றதாகவும், 2016 சட்டசபை தேர்தலில் 10 சதவீத வாக்குகளுடன் 3 இடங்கள் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். 2019 லோக்சபா தேர்தலில் 41 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களையும், 2021 சட்டசபை தேர்தலில் 21 சதவீத வாக்குகளுடன் 77 இடங்களையும் பெற்றதாக அவர் கூறினார்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜ 39 சதவீத வாக்குகளுடன் 12 இடங்களை கைப்பற்றியதாகவும், 2026ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைக்கும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
