டாக்கா:
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை நாளடைவில் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது வயது 80.
கலிதா ஜியாவின் மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மறைவால் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், கலிதா ஜியாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா–வங்கதேச உறவுகளுக்கு கலிதா ஜியா ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
