அறவழியில் போராடிய ஆசிரியர்கள் மீது போலீஸ் அடக்குமுறை; தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்
மதுரை:
சென்னையில் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் மூலம் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளதாக, தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலமுறை போராடியும் எந்த பலனும் இல்லை என தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக முறையான அறிவிப்புடன் விடுமுறை நாட்களில் அறவழியில் போராட்டம் தொடங்கியதாகவும், ஆனால் அந்த போராட்டத்தை அடக்க போலீசாரை கொண்டு ஆளுங்கட்சி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆசிரியர்களின் ஆடைகளை போலீசார் கிழிக்கும் செயல் ஜனநாயக விரோதமானது என்றும், கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும், 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் ஆட்சிக்காலம் முடிவடையும் வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழுவும் ஏமாற்று நாடகமாக முடிந்ததாகவும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்பதாக கூறி அரசு காலம் கடத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், ஆசிரியர் சங்கங்களிடையே பாகுபாடு காட்டி வருவதாகவும், ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் கூறினார். சம்பள முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட குழு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசுக்கு உரிய கருத்துருவை வழங்காமல் காலம் தாழ்த்தியிருப்பதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
அடக்குமுறையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
