போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் இல்லை; புடின் குற்றச்சாட்டு
மாஸ்கோ:
ரஷ்யா–உக்ரைன் இடையிலான நான்கு ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைன் தலைமை அமைதியான முறையில் மோதலை தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என்றால், ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் அடையும்” என்று எச்சரித்தார். இந்தக் கருத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புளோரிடாவில் சந்திக்க உள்ள நிலையில் வெளியாகியுள்ளது.
உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருகிறது. ஜெலென்ஸ்கி–டிரம்ப் சந்திப்பில், போர் முடிவுக்கான திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வரும் நிலையிலும், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது சுமார் 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் கீவ் நகரில் பல இடங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை “போரைத் தொடர விரும்புவதற்கான ரஷ்யாவின் உண்மையான அணுகுமுறை” என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக கண்டித்துள்ளார். ரஷ்ய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும், உண்மையில் ரஷ்யாவின் பதிலாக ஏவுகணைகளும் ட்ரோன்களுமே உள்ளன என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல் புடினும் அவரது உள்குழுவும் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை என்பதை காட்டுவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலிலும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெலென்ஸ்கி–டிரம்ப் சந்திப்பு போரின் போக்கை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
