டமாஸ்கஸ்:
சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொடூர சம்பவம் குறித்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோம்ஸில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடைபெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார்.
மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
