அரசுத் திட்டங்கள் குறித்து 50 மதிப்பெண்: உதவி பேராசிரியர் தேர்வில் கேள்விகள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தாள்–2 பகுதியில் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து கேள்விகள் இடம்பெற்றது தேர்வர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.
கோவையில் இந்த தேர்வுக்கு 4,745 பேர் விண்ணப்பித்த நிலையில், 3,996 பேர் தேர்வில் பங்கேற்றனர். காலை நடைபெற்ற தாள்–1 தேர்வு 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடந்தது. தொடர்ந்து மதியத்தில் 50 மதிப்பெண்களுக்கான தாள்–2 தேர்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது.
தாள்–1 தேர்வு கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் தெரிவித்தனர். தாள்–2ல் ஐந்தில் ஒரு கேள்விக்கு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டும் என்ற நிலையில், மூன்றாவது கேள்வியில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் ஆகியவற்றின் விளக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்து எழுத வேண்டியிருந்தது.
ஒவ்வொரு திட்டத்திற்கும் தலா 10 மதிப்பெண் வீதம் 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆங்கில மேஜர் பிரிவில் தேர்வு எழுதிய ஒருவர், தாள்–1 கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், தாள்–2ல் அரசுத் திட்டங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதால் பலர் அதனை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார். ஒரு திட்டத்திற்கு 10 மதிப்பெண் வழங்கப்பட்டதால் எளிதாக இருந்தாலும், உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு இத்தகைய கேள்விகள் ஏன் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.
