தைவான் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனா கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது. தைவானை தனது ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில், இதற்கு தைவான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ரூ.99,822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் சீனா ஆத்திரமடைந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த 20 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 10 உயர் அதிகாரிகளுக்கும் சீனா தடைகள் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தைவான் விவகாரத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படின், அதற்கான உறுதியான பதிலை சீனா வழங்கும் என தெரிவித்துள்ளது. ‘ஒரே சீனா’ கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்களில் பெரும்பாலானவை சீனாவுடன் நேரடி வர்த்தகம் செய்யாதவை என்பதால், இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
