ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மொழி தொடர்பான விவகாரத்தில் செய்தியாளர்களை நேரடியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ஸ்ரீநகரில் நேற்று டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நிகழ்ந்தது.
அந்த சந்திப்பில் மெகபூபா முப்தி காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த சில செய்தியாளர்கள், உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு அவரிடம் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மெகபூபா முப்தி, மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்க முடியாத நீங்கள், என்னிடம் மட்டும் ஏன் இப்படியான கோரிக்கையை வைக்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி அங்கிருந்த செய்தியாளர்களை ஒரு நொடியில் அமைதிக்குள்ளாக்கியது.
தொடர்ந்து பேசிய மெகபூபா முப்தி, காஷ்மீரி மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த மொழியில் பேசுவது தங்களின் உரிமை என்றும் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
