மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது திமுக அரசின் முழுநேர நடவடிக்கையாக மாறியுள்ளதாக, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை மேற்கொண்டு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையின் 311-வது வாக்குறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும்கூட, திமுக அரசு அவர்களை புறக்கணித்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து அவர்களை அடக்குவது திமுக அரசின் வழக்கமான செயலாகிவிட்டதாகவும், இதன் மூலம் அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தபடியே, மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
