கனடாவில் மேலும் ஒரு அதிர்ச்சி; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக் கொலை
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சிராஜ் அந்தில், 2022 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக கனடாவுக்குச் சென்றார். அங்கு எம்.பி.ஏ. படிப்பை முடித்த பின்னர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கனடாவின் வான்கூர் நகரில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினத்தில், சிராஜ் அந்தில் தனது சொகுசு காரில் வெளியே சென்றிருந்தார். அப்போது, காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவரது மரணம் குறித்த முழு விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை. இதுதொடர்பாக கனடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிராஜ் அந்திலின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் ரோஹித் கூறுகையில், சிராஜ் யாருடனும் பகை கொண்டவர் அல்ல என்றும், அனைவரிடமும் அன்புடன் பழகுபவர் என்றும் தெரிவித்தார். தினமும் தொலைபேசியில் பேசுவது வழக்கம் என்றும், சம்பவம் நடந்த நாளின் இரவிலும் பேசினதாகவும் கூறினார். அதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
