போபால்:
மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு ரசாயன உரங்களே முக்கிய காரணமாக உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு மாற்றாக இயற்கை விவசாய முறையை பின்பற்றினால், விவசாயிகளின் வருமானம் குறையாது என்றும், மாறாக அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் அதிக தரத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், தண்ணீர் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும் என்றும், பொதுமக்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் திறன் இதற்கு உள்ளதாகவும் அமித் ஷா கூறினார். நாடு முழுவதும் தற்போது சுமார் 40 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையைத் தேர்வு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தன்னுடைய சொந்த நிலத்திலும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், அதனால் உற்பத்தி குறையவில்லை என்றும், மாறாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இந்திய விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள் உலக சந்தையை அடைய தேவையான முழுமையான கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
