வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு இந்து படுகொலை
முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மற்றும் அவர்களது தொழில்கள் குறிவைக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.
இந்த சூழலில், ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்தது. அதே நேரத்தில், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கிடையில், சிட்டகாங்கில் வசித்து வந்த வெளிநாடுவாழ் இந்துக்களான ஜெயந்தி சங்கா மற்றும் பாபு ஷுகுஷில் ஆகியோரின் வீடுகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம், அப்பகுதி இந்துக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தை பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் அம்ரித் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போலீசார் அளித்த முதற்கட்ட தகவலின்படி, அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்ததாகவும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
