வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
ஏற்காடு செல்லும் மலைச்சாலையில் உள்ள ஒரு கொண்டை ஊசி வளைவிற்கு ஈ.வெ.ரா. பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் அந்த இடத்தில் ‘தகடூர் அதியமான் வளைவு’ என புதிய பிளக்ஸ் ஒட்டினர்.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகள் ஒவ்வொன்றுக்கும், பண்டைய தமிழர் மன்னர்களின் பெருமையை நினைவுகூரும் வகையில் பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. அந்த வரிசையில், எட்டாவது வளைவிற்கு முன்பாக ‘தகடூர் அதியமான் வளைவு’ என்ற பெயர் இருந்தது.
ஆனால், கடந்த கோடை விழா காலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றபோது, அந்த எட்டாவது வளைவிற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஈ.வெ.ரா. பெயர் மாற்றமாக வைக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து, அந்த வளைவில் கூடிய நாம் தமிழர் கட்சியினர், ஈ.வெ.ரா. பெயரை மறைத்து கருப்பு பெயிண்ட் பூசி, அதன் மேல் ‘தகடூர் அதியமான் வளைவு’ என்ற பெயருடன் பிளக்ஸ் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறுகையில், “எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஏற்கனவே தகடூர் அதியமான் பெயர் இருந்தது. கோடை விழா நேரத்தில் திட்டமிட்டு அந்த பெயரை மாற்றியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வளைவிற்கு தகடூர் அதியமான் பெயரே தொடர வேண்டும்” என தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஈ.வெ.ரா. பெயரை அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பிலும் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
