இஸ்ரேலை மீண்டும் மீண்டும் சீண்டும் ஹமாஸ்… பதிலடி நிச்சயம் என்கிறார் நெதன்யாகு
ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் பதிலடி அளிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் காசா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும், அந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ரயிட் சயித் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராபா பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹமாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காசாவில் இருந்து அந்த அமைப்பை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதும், பயங்கரவாதமற்ற பிராந்தியத்தை உருவாக்குவதும் இஸ்ரேலின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறும் எந்த நடவடிக்கைக்கும் தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு பின்னர் காசாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
