சூளகிரி:
அணுகு சாலை சான்று வழங்க ரூ.60,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சூளகிரி பி.டி.ஓ., மற்றும் மருதண்டப்பள்ளி பஞ்சாயத்து செயலர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (56), தனது மனைவி லட்சுமி பெயரில், சூளகிரி அருகே மருதண்டப்பள்ளி பஞ்சாயத்தில் 53 சென்ட் காலி இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்திற்கு செல்ல அணுகு சாலை சான்று வழங்க கோரி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் அவர் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் பேரில், சூளகிரி பி.டி.ஓ., (கிராம வளர்ச்சி) கார்த்திக்குமார் (43) மற்றும் மருதண்டப்பள்ளி பஞ்சாயத்து செயலர் ராஜேந்திரன் (37) ஆகியோர், சான்று வழங்க ரூ.60,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க மறுத்த வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ.60,000 தொகையை அவரிடம் வழங்கி, போலீசார் வலைவீசி நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதிய நேரத்தில், சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில், அந்த தொகையை வெங்கடேசன் பி.டி.ஓ., கார்த்திக்குமார் மற்றும் பஞ்சாயத்து செயலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் வழங்கியதாகவும், அதை ராஜேந்திரன் தனது பாக்கெட்டில் வைத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் இருந்து சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
