2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்; குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்: வேலுார் இப்ராஹிம் பேட்டி
திருப்பரங்குன்றம்:
2026ஆம் ஆண்டு தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழுகைக்காக திருப்பரங்குன்றம் மலை தர்காவிற்கு செல்ல முயன்றபோது தன்னை தடுத்ததாகவும், அதே நேரத்தில் தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமியர்களை மட்டும் மலைக்குச் செல்ல அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் தர்காவை அயோத்தி போன்று மாற்ற முயற்சி நடைபெறுகிறது என ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் பா.ஜ.,வை காரணம் காட்டி இஸ்லாமியர்களை மிரட்டுகின்றனர் என்றும் அவர் கூறினார். இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த உண்மையை புரிந்து கொண்டு இஸ்லாமிய மக்கள் ஓட்டளித்தால், 2026ல் தி.மு.க.,வின் டெபாசிட் போய்விடும் என்ற அச்சத்தால் தன்னை தடுக்கிறார்கள் என்றும் வேலூர் இப்ராஹிம் கூறினார். அனுமதி கேட்கும்போது பள்ளிவாசல் நிர்வாகத்தை கேட்டு தான் முடிவு எடுக்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாகவும், மலை மீது உள்ள இந்த இடத்தை ஹிந்துக்கள்தான் இஸ்லாமியர்களுக்கு வழங்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.
மாலை 5 மணிக்கு பிறகு அனுமதி இல்லை என உதவி கமிஷனர் தெரிவித்த நிலையில், தி.மு.க.,வை ஆதரிக்கும் 25 இஸ்லாமியர்கள் கொடியுடன் இரவு 8 மணிக்கு மேல் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பினார். மூன்று பேர் வழிபட செல்ல அனுமதி மறுக்கப்படுவது நியாயமல்ல என்றும் அவர் கூறினார்.
நாளை அனுமதி அளிக்கப்படும் நேரம் குறித்து கேட்டபோது, சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என உதவி கமிஷனர் தெரிவித்ததாகவும், காவல்துறை சட்டத்தின் அடிப்படையில் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். 2026ல் தி.மு.க., ஆட்சி துடைத்தெறியப்படும் என்றும், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைவதுடன் கார்த்திகை மாதத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலைக்கு செல்ல அனுமதி மறுக்கும் முதல்வர் ஸ்டாலின் பாசிச அரசியல் செய்கிறார் எனவும், அனுமதி கிடைக்கும் வரை அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனித தலத்தில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட வந்தவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும், சிக்கந்தர் மலை என கூறியவர்களையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
போலீசாருடன் வாக்குவாதம்
மாலை 6.15 மணியளவில் தர்காவிற்கு செல்ல வந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாலை 5 மணிக்கு பிறகு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அவர், இரவு 8 மணிக்கு மேல் கொடி ஏற்ற சென்றவர்களை அனுமதித்தீர்கள், ஆனால் தொழுகைக்காக செல்லும் மூன்று பேரை ஏன் தடுக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க., முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கி, பா.ஜ., முஸ்லிம்களை தடுக்கிறீர்களா என்றும், சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 2000 ஆண்டுகளாக தீபத்தூணில் தீபம் ஏற்றி வந்ததாகவும், நீதிமன்ற தீர்ப்பை போலீசார் ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேல்முறையீடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக உதவி கமிஷனர் சசி பிரியா தெரிவித்தார்.
தர்ணா மற்றும் கைது
சுமார் 20 நிமிட வாக்குவாதத்திற்கு பிறகு, வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் பழனி ஆண்டவர் கோயில் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு 10.15 மணி வரை தர்ணா தொடர்ந்த நிலையில், மறுநாள் காலை மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வேலூர் இப்ராஹிம் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறுவர்களுக்கு ஊட்டினார். தீபத்தூண் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான பெண்களுடன் கும்மி பாடல் பாடி நடனமாடினார். பின்னர் அனுமதி இன்றி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறி, வேலூர் இப்ராஹிம் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய வேலூர் இப்ராஹிம், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தால் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டாலும் மீண்டும் போராட்ட களத்தில் நிற்போம் என்றும் அவர் கூறினார்.
