ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை தாக்கி கொலை செய்ததுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவங்களை கண்டித்து, டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெளியே இன்று மீண்டும் பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெறும் போராட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சூழலில், வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், வங்கதேசம் மட்டுமின்றி எந்த நாட்டிலும் பெரும்பான்மை அல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக வாழும் சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
