புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூறிய அவர், இந்தியாவின் இரண்டு எதிரிகளும் அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள் என்பதால், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போன்ற ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த குறுகிய காலத்தில், அதிக தீவிரம் கொண்ட மோதல்களை எதிர்கொண்டு போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நிலத்தை மையமாகக் கொண்ட நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இதற்கு காரணமாக நிலப்பிரச்னைகள் உள்ளதாகவும் அனில் சவுகான் விளக்கினார். இருப்பினும், இத்தகைய மோதல்களைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவ விவகாரங்களில் தற்போது மூன்றாவது புரட்சியின் உச்சகட்டத்தில் இருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்றைய போர்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் தெளிவாக வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த அந்த போரில், இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றி கிடைத்ததாகவும், அனைத்து போர் உபகரணங்களும் ஒரே நேரத்தில் அதிக வேகத்துடன் பயன்படுத்தப்பட்டதாகவும் முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
