இந்தியா, புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் இலங்கையில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த பாதிப்புகளை தொடர்ந்து, முதற்கட்டமாக இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பியதுடன், மீட்புப் பணிகளுக்காக குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் இலங்கை வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இலங்கை அதிபர் **அநுர குமார திசநாயக்கே**யையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்தியா வழங்கும் 450 மில்லியன் டாலர் உதவியில், 350 மில்லியன் டாலர் சலுகைகளுடன் கூடிய கடனாகவும், 100 மில்லியன் டாலர் மானியமாகவும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் ரயில் பாலங்கள் சீரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த இயற்கைப் பேரிடர் இலங்கைக்கு புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
