பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
சென்னையின் பனையூரில், தவெக தலைவர் நடிகர் விஜய் வருகையின்போது, அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் திடீரென அவரது காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தொகுதிகளுக்கு மட்டும் நிர்வாகிகள் நியமனம் நிலுவையில் உள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் இன்று (டிசம்பர் 23) நடைபெறும் என சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் விஜய்யின் பனையூர் அலுவலகம் முன்பு கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினர். தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தவிர்த்து, மற்ற 5 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜிதா ஆக்னல் என்ற நிர்வாகி தமது ஆதரவாளர்களுடன் பனையூர் வந்தார். அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே, பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல், அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடிகர் விஜய்யிடம் தங்களின் அதிருப்தியை தெரிவிக்க காத்திருந்தனர். இதுபோல், திருத்துறைப்பூண்டியில் இருந்தும் தவெகவின் அதிருப்தி நிர்வாகிகள் விஜய்யை சந்திக்க காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில், தனக்கு பதவி வழங்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்ட அஜிதா ஆக்னல், தமது ஆதரவாளர்களுடன் விஜய்யின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார். விஜய் காரில் வந்தபோது, அவரை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். காரின் முன்பகுதியில் ஆதரவாளர்கள் திரண்ட நிலையில், பவுன்சர்கள் அவர்களை அகற்ற முயன்றனர். தொடர்ந்து அதிருப்தியாளர்கள் முன்னேற முயன்றதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொறுப்பு வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியபடி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அதிருப்தியாளர்கள் ஒருபுறம் முற்றுகையில் ஈடுபட்ட நிலையில், பவுன்சர்களின் உதவியுடன் நடிகர் விஜய் காரை நிறுத்தாமல் பனையூர் அலுவலகத்திற்குள் சென்றார். காலை முதல் காத்திருந்தும் விஜய் சந்திக்காததால், அஜிதா ஆக்னல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிருப்தியில் அங்கேயே முகாமிட்டனர்.
விஜய் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில், பனையூர் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா ஆக்னல் தமது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, நிர்மல் குமார் சமாதான பேச்சுவார்த்தைக்காக அங்கு வந்தார். ஆனால், விஜய் நேரில் வரவேண்டும் என அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்ததால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் நிர்மல் குமார் அங்கிருந்து சென்றார்.
தர்ணாவில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், காலை முதல் உணவு எதுவும் இல்லாமல் காத்திருப்பதாகவும், விஜய் நேரில் வந்து பேசாமல் அவர்கள் அங்கிருந்து செல்ல மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். சாமுவேல் ராஜ் யார் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உழைத்தவர்களை புறக்கணித்து பணம் பெற்றுக் கொண்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 30 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் என்றும், தூத்துக்குடியில் தவெக என்றால் அஜிதா ஆக்னல் பெயரே அறியப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், அஜிதா ஆக்னல் ஆதரவாளர்களின் போராட்டம் தொடர்ந்த வேளையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவித்தார். இதற்கான அவரது கையெழுத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்ட அஜிதா ஆக்னல், இறுதி வரை தங்களின் பயணம் விஜய்யுடன் தொடரும் என தெரிவித்துவிட்டு, பின்னர் தமது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
