திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில், மலையில் உள்ள தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடாக, நேற்று இரவு 8.30 மணியளவில் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலிலிருந்து மின்னொளியுடன் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டு, பெரிய ரதவீதி மற்றும் கோட்டை தெரு வழியாக மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், தர்காவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் அந்த கொடி ஏற்றப்பட்டது.
இந்த சூழலில், 20 நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணை வழங்கிய பின்னர் மலைக்கு செல்லலாம் என காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.
