காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
குவஹாத்தி:
விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அவர்களின் பிரச்னைகளை புறக்கணித்து ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பளித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பிலான யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அவர் பேசினார். அசாம் மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு என தெரிவித்த பிரதமர், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அசாம் இளைஞர்களை பெரிய கனவுகளை காண ஊக்குவிப்பதாக கூறினார்.
இந்த யூரியா உரத் தொழிற்சாலை, உள்ளூர் விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளிக்கும் என்றும், அசாம் மாநில இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உரத் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என மோடி விமர்சித்தார். விவசாயிகளின் பிரச்னைகளை புறக்கணித்து, ஓட்டு வங்கியை பாதுகாக்கும் நோக்கில் ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்த பாஜ இன்னும் அதிகமாக செயல்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் விவசாயிகள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் பிரதமர் கூறினார். விவசாயிகளுக்கு இடையறாத உர விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்றும், அந்த தேவையை இந்த புதிய யூரியா தொழிற்சாலை பூர்த்தி செய்யும் என்றும் அவர் விளக்கினார்.
பாஜ ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கான பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், காங்கிரஸ் அசாம் மக்களின் நலனை பற்றி கவலைப்படாமல் அதிகாரத்தில் இருப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
