வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் எரித்து கொலை: 7 பேர் கைது
டாக்கா:
வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஹிந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மீது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வங்கதேசத்தில் கடும் கலவரம் வெடித்தது. இதன் போது பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீதும் கல்லெறி தாக்குதல் நடைபெற்றது.
இந்த நிலையில், மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (30) என்பவரை, முஸ்லிம் மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி ஒரு கும்பல் சுற்றிவளைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அதன்பின்னரும் வன்முறை கும்பல் நிற்காமல், அவரது உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஹிந்துக்கள் மீது நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் முகமது யூனுஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
7 பேர் கைது
இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி முகமது யூனுஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த கொலை வழக்கில் முகமது லிமோன், முகமது தாரெக், முகமது மாணிக், எர்ஷாத் அலி, நிஜாம் உதின், ஆலோம்கீர் மற்றும் முகமது மிராஜ் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோகமான சம்பவம்
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வங்கதேசம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைக்கு மத்தியில், தாங்க முடியாத ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சொல்லொணா கொடூர குற்றவாளிகளின் கைகளில் ஹிந்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த சம்பவத்தை கண்டித்து வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை பாராட்டுவதாக கூறினார். அதே நேரத்தில், கொலையாளிகளை தண்டிக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்கிறது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க என்ன செய்கிறது என்பதையும் அவர் கேள்வியாக முன்வைத்துள்ளார்.
தேர்தலை பாதிக்கலாம்
மற்றொரு பதிவில், வங்கதேசத்தின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்கள் மீது வன்முறை கும்பல்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்த சம்பவங்கள் கவலை அளிப்பதாக சசி தரூர் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வன்முறை, பிப்ரவரியில் நடைபெற உள்ள தேர்தல்களை பாதிக்கக்கூடும் என்றும், இந்த நிலைமை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் கூறினார். பத்திரிகையாளர்களையும் தூதரகங்களையும் பாதுகாப்பது இடைக்கால அரசின் பொறுப்பு என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியை மீட்டெடுத்து, நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
