நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது; நயினார் நாகேந்திரன்
சென்னை:
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் ரவிக்குமார், சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் ரவிக்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த மன வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.
ஆளும் அரசின் அலட்சியமும் ஆணவமும் காரணமாக பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவதாக கூறிய நயினார் நாகேந்திரன், இத்தகைய நிகழ்வுகள் நெஞ்சை கனக்கச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையிழப்பு, அவர்களை தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கத் தூண்டுவது மனித இனத்திற்கே ஆபத்தான நிலை என அவர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடி, இனி தமிழகத்தில் படர அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
