குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ஆமதாபாத்:
குஜராத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 73 லட்சத்து 73 ஆயிரத்து 327 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, குஜராத்திலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கின. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்குவதற்கு முன்பு, குஜராத்தில் மொத்தமாக 5 கோடியே 08 லட்சத்து 43 ஆயிரத்து 436 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 4 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரத்து 109 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், 73 லட்சத்து 73 ஆயிரத்து 327 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டதற்கான காரணங்களில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி,
இறந்த வாக்காளர்கள் – 18 லட்சத்து 07 ஆயிரத்து 278 பேர்,
ஆய்வின் போது இல்லாதவர்கள் – 9 லட்சத்து 69 ஆயிரத்து 662 பேர்,
இடம்பெயர்ந்தவர்கள் – 40 லட்சத்து 25 ஆயிரத்து 553 பேர்,
மற்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் – 1 லட்சத்து 89 ஆயிரத்து 364 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள், தங்களது ஆட்சேபனைகளை வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
