கட்சிப் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் வெளியிட உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் கருத்துகளைப் பெற்று, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான மாதிரி வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி, அரசு தாக்கல் செய்த வழிகாட்டு நெறிமுறைகளில் பல முக்கிய விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் திரளும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது போன்றவை அந்தந்த அரசியல் கட்சிகளின் முழுப் பொறுப்பாகும். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரே வழங்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம், நோக்கம், எதிர்பார்க்கப்படும் மக்கள் எண்ணிக்கை, வருகை தரும் வாகனங்கள், முக்கிய தலைவர்கள் விவரம் உள்ளிட்டவை அனுமதி விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ரோடு ஷோக்கள் தொடர்பாக, பிரச்சாரம் தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடம் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். முக்கிய தலைவர்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் விண்ணப்பத்தில் இல்லையெனில் அனுமதி வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் எத்தனை பேர் கூட முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்; இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பும், 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கக்கூடிய மாநாடுகள் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன்பும் அனுமதி கோர வேண்டும். முதலுதவி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கே எனவும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி வழிகாட்டுதல்களை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி பரிசீலித்த நீதிபதிகள், அவற்றை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கி, அவர்களின் கருத்துகளைப் பெற்று இறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து கட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
