திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி
மதுரை: திருப்பரங்குன்றம் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ணசந்திரன் உடலுக்கு, பா.ஜ. மாநில செயலாளர் ராம சீனிவாசன் மதுரை அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த பூர்ணசந்திரன் (40), மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த துயரச் சம்பவத்திற்கு தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் ராம சீனிவாசன் கூறியதாவது: “பூர்ணசந்திரனின் மரணம் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. நேற்று முதல் இந்த துயரம் தமிழர்களின் மனதை உலுக்கி வருகிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர, தர்மத்திற்காக உயிர் இழப்பதை பா.ஜ. ஒருபோதும் ஏற்காது,” என்றார்.
மனைவி கண்ணீர் வாக்குமூலம்
இறந்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி கூறியதாவது: “ஆண்டுதோறும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இந்த முறை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை நினைத்து என் கணவர் மனவேதனையுடன் இருந்தார். அவர் சிவ பக்தர். மாதம் மூன்று முறை சதுரகிரி மலைக்கு சென்று வந்தார்,” என்று கண்ணீருடன் தெரிவித்தார். அவருக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆறுதல் கூறினார்.
ரூ.1 கோடி நிதியுதவி கோரிக்கை
அஞ்சலி செலுத்திய பின் தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசின் நடவடிக்கையால் மனவேதனை அடைந்தே பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இன்று அமாவாசை நாளில் பூர்ணசந்திரன் மறைந்துள்ளார். இதற்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளதுபோல், பூர்ணசந்திரன் குடும்பத்திற்கும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி, அவரது மனைவி இந்துமதிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ. சார்பில் பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்,” என்றார். அவருடன் காடேஸ்வரா சுப்ரமணியனும் உடனிருந்தார்.
