புதுடில்லி:
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி’ மசோதா, கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இதுவரை மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என அழைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், புதிய பெயருடன் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஊரக மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100 இலிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், திட்ட செலவில் மத்திய அரசின் பங்களிப்பு மாற்றப்பட்டு, 60 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் லோக்சபாவில் அறிமுகப்படுத்தினார். திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கும், சட்டத் திருத்தங்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகல்களை கிழித்து வீசி கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்துக்கும் இடையே, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
