கல்லத்தி மரத்தில் பிறை கொடி ஏற்ற தடை விதிக்க கோரி மனு
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள ஸ்தல விருட்சமான கல்லத்தி மரத்தில் நிலா பிறை சின்னம் கொண்ட கொடி ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது என, ஹிந்து மக்கள் கட்சி மற்றும் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உட்பட்ட மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரம் மிகவும் பழமையானதும், மத முக்கியத்துவம் கொண்டதும் ஆகும். திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவீதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் கோயிலுக்கே சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் நீதிமன்ற உத்தரவுகள் ஏற்கனவே உள்ளன.
இந்நிலையில், மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றுவதற்கு தர்கா நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி ஏற்றப்பட வேண்டுமானால், அது தர்கா வளாகத்திற்குள் அல்லது தர்காவின் முன்புறத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்கால ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் வகையில், கல்லத்தி மரத்தைச் சுற்றி கோயில் நிர்வாகம் வேலி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் அகில பாரத அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், ஆலய பாதுகாப்புக் குழு நகர் தலைவர் முருகன், ஹிந்து ராஷ்டிர சபா மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் முத்து சேர்வை மற்றும் பாஜ வழக்கறிஞர் பிரிவு மதுரை மேற்கு மாவட்ட இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
