மதுரை:
கிறிஸ்தவ சிந்தனைகளுக்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் என்னிடம் காட்டும் அன்பும், பாசமும் என்னை மனமார நெகிழ வைக்கிறது. இந்த விழாவில் துணை முதல்வராகவும், திமுக இளைஞரணி செயலராகவும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கிறிஸ்தவ கொள்கையும் திராவிட கொள்கையும் மனிதநேயம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. இரக்கம் என்ற உயரிய பண்பை கிறிஸ்தவம் போதிக்கிறது; அதே கருத்தை திராவிட இயக்கமும் வலியுறுத்துகிறது. சாதாரண நிலையில் இருந்தவர்களும் உழைப்பின் மூலம் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை திராவிட இயக்கம் செயல்பாடுகளால் நிரூபித்துள்ளது. இதற்கு ஈ.வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் உதாரணங்கள்.
தமிழகம் மற்றும் தமிழக மக்கள் மீது மத்திய ஆட்சியாளர்களுக்கு அச்சம் உள்ளது. மக்கள் ஒன்றிணைந்து விடுவார்களோ, தங்களது அதிகாரம் சவாலுக்கு உள்ளாகிவிடுமோ என்ற பயத்தால், சாதி மற்றும் மத அடிப்படையில் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் எவ்வளவு முயன்றாலும் தமிழகத்தில் அந்தப் பிரித்தாளும் அரசியல் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
