புதுடில்லி:
இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி வெற்றிகரமாக பயிற்சியை முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ அகாடமி, 1932ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த அகாடமியில் இருந்து சுமார் 67 ஆயிரம் பேர் பயிற்சி முடித்து இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
ஆனால், இந்நாள் வரை எந்த பெண் அதிகாரியும் இந்த அகாடமியில் பயிற்சி பெற்று பட்டம் பெறவில்லை. அந்த வரலாற்றுத் தடையை உடைத்து, 23 வயதான சாய் ஜாதவ் முதல் பெண் அதிகாரியாக பட்டம் பெற்றுள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்.
நான்காவது தலைமுறை ராணுவ சேவை:
சாய் ஜாதவ், தனது குடும்பத்தில் ராணுவச் சீருடை அணியும் நான்காவது தலைமுறை உறுப்பினராக உள்ளார். அவரது கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் சேவை செய்தவர்.
மேலும், அவரது தந்தை சந்தீப் ஜாதவ் தற்போது இந்திய ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சாய் ஜாதவின் இந்த சாதனை, இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சாய் ஜாதவ், பிரதேச ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இந்த வெற்றி, இளம் பெண்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாகவும், பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
