மின்துறையில் உள்ள சிலர் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துகின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழக சிறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், மின்தடை மற்றும் மின்சாரக் கொள்முதல் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
சிறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள்
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேனி சிறையில் கதவுகளைப் பூட்டும் நடைமுறையில் இருந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறிய அவர், இந்தச் சம்பவத்தில் சிறைக் கண்காணிப்பாளருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
சிறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய கடந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேவையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்படுகிறதா?
மின்துறைக்குள் இருக்கும் சில நபர்கள் வேண்டுமென்றே முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின்போது மின்தடை ஏற்படுத்துவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து பொறுப்பில் இருக்கும் அமைச்சர் என்ற முறையில் தன்னால் அதிகம் பேச முடியாது என்றும், நீண்ட காலமாக இத்தகைய பிரச்னைகளைச் சரிசெய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மின்சாரக் கொள்முதல் குறித்து விளக்கம்
அதிக விலைக்கு மின்சாரம் இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், அதற்கான டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
அடுத்த வாரம் மீண்டும் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். சில நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மின் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் நிலவுவதாகவும், பல்வேறு மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்னை இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
