13 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்சம் ரூ.50!
சென்னை: தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய கட்டணத்தின்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் ரூ.25 வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.25 குறைந்தபட்சக் கட்டணமாகவும், அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பெட்ரோல் விலை உயர்வு, காப்பீட்டுச் செலவு, வாகனப் பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஓட்டுநர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என 2022 பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஓட்டுநர் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து, தமிழக அரசு புதிய கட்டண விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகளைச் செயல்படுத்த மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டண விவரங்கள்:
- முதல் 1.8 கி.மீ.: குறைந்தபட்சம் ரூ.50
- கூடுதல் ஒவ்வொரு கி.மீ.: ரூ.25
- இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை: வழக்கமான கட்டணத்தைவிட 1.5 மடங்கு
- காத்திருப்புக் கட்டணம்: நிமிடத்திற்கு ரூ.1
13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண மாற்றம், ஆட்டோ ஓட்டுநர்களின் செலவுகளையும் பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
